வடகிழக்குப் பருவமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மாநகரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மழை வெள்ளம் சூழ்ந்துள்ள கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், கே.கே.நகர், கோயம்பேடு உள்ளிட்டப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டு அவர்களது குறைகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மேலும் அவர் சென்னை கோயம்பேடு தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு போர்வை, பால் பாக்கெட், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகிவிட்டது. அரசு சரியான முறையில், திட்டமிடாததால் மழை நீர் வீதிகளில் தேங்கி உள்ளது.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் நாங்கள் முன்பே திட்டமிட்டு செயல்படுவோம். திமுக அரசு முறையாகத் திட்டமிடாமல் இருந்ததால் இப்பொழுதே இந்த நிலை என்றால், வரும் நாள்களில் கனமழை பொழியும் நிலையில் என்னவாகும்? அரசின் மெத்தனப் போக்கால் பல்லாயிரக்கணக்கானோர் முகாமில் தங்கியுள்ளனர்.
பால் கூட கிடைக்கவில்லை
வானிலை முன்னறிவிப்பு வந்த உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இனியேனும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோட்டார்கள் மூலம் நீர் தேங்கிய இடங்களில் உள்ள நீரை விரைந்து அகற்ற வேண்டும். குழந்தைகளுக்குப் பால் கூட கிடைக்கவில்லை என என்னிடம் பலர் தெரிவித்த நிலையில், மாநகராட்சி ஆணையரிடம் நீரை அதிக திறன் கொண்ட இன்ஜின் மூலம் அகற்றுமாறு கூறியுள்ளேன்.
பல இடங்களில் குடிநீருடன் கழிவு நீர் கலந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஆகஸ்ட் மாதம் முதலே தூர்வாரினோம். எனவே, மழை பெய்த சில மணி நேரத்தில் நீர் வடிந்து விடும்.
திமுக அரசு வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்துள்ளது. நான் சென்ற 4 இடத்திலும் கண்ணீர் மல்க என்னிடம் புகார் தெரிவித்தனர். அலுவலர்கள் யாரும் அங்கு சென்று இதுவரை பார்வையிடவில்லை. அதிமுக அரசு 3,000 இடங்களுக்கு மேல் நீர் தேங்குவதைக் கண்டறிந்து அங்கு வடிகாலை ஏற்படுத்தினோம். அதனால் 50 இடங்களில் மட்டும் நீர் தேங்கியது.
அம்மா உணவகத்தை மூட முயற்சி
அம்மா உணவகம் மூலம் கரோனா காலத்தில் நாள்தோறும் 8 லட்சம் பேருக்கு சுட சுட உணவளித்தோம். அம்மா பெயரில் இருப்பதால் திமுக அரசு மூட முயற்சிக்கிறது.
பணியாளர் ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அம்மா உணவக மாதிரியில் உணவகத்தை திறந்து வரும் நிலையில் இங்கு மட்டும் மூட முயற்சி நடக்கிறது. அரசு முறையாக, இனி வரும் நாளில் நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை. முதலமைச்சர், அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் எனத்தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் ஒரு சில இடங்களை மட்டுமே சென்று பார்வையிட்டுள்ளார்.
மழை வெள்ளப் பாதிப்பை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், மக்களை துன்பத்திலிருந்து அரசு மீட்டெடுக்க வேண்டும். நாங்கள் தூர்வாரியதால் தான் அடையாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர் முறையாக வடிந்தது.
நவீன இயந்திரம் மூலம் அடைப்புகளைத் தூர்வாரினோம். மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது வேதனையான சம்பவம். 3 மாதம் முன்பே சென்னை சுற்றுவட்டார நீர்நிலைகள் நிரம்பி இருந்தன.
திமுக பழிவாங்கும் அரசு
மழை குறித்த விழிப்புணர்வை அரசு பொதுமக்களுக்கு முறையாக வழங்கவில்லை. எங்கள் ஆட்சியில் அடையாறு, கூவம், கொசஸ்தலையில் முறையாக நிதி பெற்று தூர் வாரினோம்.
மு.க.ஸ்டாலின் அரசு 100 நாளில் செய்த சாதனை வீடுதோறும் நீர் தேங்க காரணம் ஆனது தான். மு.க.ஸ்டாலின் விளம்பரம்தான் தேடுகிறார். திட்டமே செயல்படுத்தாமல் தான் செய்தது போல வெளிப்படுத்திக் கொள்கிறார்.
எனது உதவியாளரிடம் சோதனை நடத்தி எனக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சிக்கிறார்கள். 2007-ல் நான் சட்டப்பேரவை உறுப்பினாராக இருக்கும் போதே என் வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி சோதனை செய்தார்கள். திமுக அரசு பழிவாங்கும் அரசாக உள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கடும் வெள்ளத்திலும் கட்டிங் போட்ட குடிமகன்கள்!