சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடி வருகையின்போது எடப்பாடி பழனிசாமி மோடியுடன் ஆங்கிலத்தில் பேசியதை ஆர்.பி.உதயகுமார் மிகவும் பெரிதாகப் பேசுகிறார். ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் பேசியதையடுத்து எடப்பாடி பழனிசாமியை பெரிய தலைவராக பேசுகின்றனர். நவம்பர் 11ஆம் தேதியுடன் தற்காலிக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பதவி காலாவதி ஆகி உள்ளது.
பொதுச்செயலாளர் பதவியும்; இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் இரண்டும் காலாவதி ஆகி உள்ளது. தற்பொழுது அவர் எந்தப் பதவியிலும் இல்லை. ராஜன் செல்லப்பா, ஓ.பன்னீர்செல்வம் அவர்களைப் பற்றி செல்லாத நோட்டு என்று தவறாகப் பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் கள்ள நோட்டு.
நவம்பர் 21ஆம் தேதி வரக்கூடிய பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதி வெல்லும் என நம்பிக்கை உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தினார். ஜெயலலிதாவின் முயற்சி காரணமாகவே பேரறிவாளன் உட்பட ஏழு பேருக்கு விடுதலை கிடைத்தது.
2024 நாடாளுமன்றத்தேர்தல் சமயத்தில் பாஜகவினர், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். மீண்டும் மோடி தான் பிரதமராக வேண்டும் என்று நாங்கள் கூட்டணி வைப்போம்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்வதில் குறியாக இருந்தார்களே தவிர, ஜெயலலிதாவின் உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்ல யாரும் முயற்சி செய்யவில்லை.
அப்போது பொறுப்பு முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அனைவரிடமும் உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்வோம் எனக்கூறியபோது அதை யாரும் கேட்கவில்லை. இந்த விவகாரத்தில் சசிகலாவைப் பற்றி கூறுவதற்கு கருத்து ஏதுமில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சென்னை வாக்காளர் சிறப்பு முகாம்: 23 ஆயிரத்து 519 பேர் விண்ணப்பம்