சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற செய்த வழக்கில் கைதாகிச் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் அமலாக்கத்துறை அலுவலகமான சாஸ்திரி பவனில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விசாரணை அமலாக்கத்துறையின் அறிவிப்பின் படி நாளை (ஆக 12) வரை நடக்கும்.
இந்நிலையில் கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கட்டி வரும் புதிய சொகுசு வீட்டை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தனர். 2.49 ஏக்கர் பரப்பளவும், 30 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நிலத்தை, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்த ஆவணங்களைக் கைப்பற்றிய தோடு, மேலக்கரூர் சார் பதிவாளருக்கு முடக்குமாறு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும் முடக்கப்பட்டுள்ள அந்த இடம் அசோக் குமாரின் மாமியார் லட்சுமி என்பவரின் பெயரிலிருந்துள்ளதும், அதன்பின் அவரது மகள் நிர்மலாவின் பெயருக்கு மாற்றப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த நிலம் குறித்து அசோக் குமாரின் மாமியார் லட்சுமியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்காக லட்சுமிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் கொடுத்துள்ளனர். ஏற்கனவே அவரது மகளும், அசோக் குமாரின் மனைவியுமான நிர்மலாவுக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மேலும் லட்சுமியிடம் நிலத்தை விற்ற தொழிலதிபரின் மனைவி அனுராதா ரமேஷ், தனியார் வங்கி மூலம் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்களையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. லட்சுமியிடம் நிலத்தை விற்பனை செய்தவர்களையும் அமலாக்கத்துறை விசாரணை செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தற்போது நிர்மலாவின் தாயார் லட்சுமிக்கு என்பவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா இதுவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறைக்குச் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுக்கக் கொடுத்துள்ள அனுமதி நாளையுடன் நிறைவு பெறுகிறது. மேலும் மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இரவு நேரங்களில் விசாரணை செய்யப்படுவதில்லை.