சென்னை: சென்னை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரி உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களிலும், அதேபோல் தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் முன்னா, இன்னாள் அரசுத்துறை அதிகாரிகள் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டையில் நடந்த சோதனை: அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்திரன். இவர் தமிழகம் முழுவதும் 15 வருடத்திற்கு மேலாக அரசு மணல் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர், பால் உற்பத்தி நிலையம், கல்லூரிகள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, 2016 - 2017 ஆண்டுகளில் சட்டத்திற்கு விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ததாக அப்போது அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று காலை முதல் புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள சமுத்திர அப்பார்ட்மெண்ட் அருகே உள்ள அவரது நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்பு நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறதா அல்லது தற்போது சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட புது வழக்கா என்பது அமலாக்கத் துறையின் அறிவிப்பிற்கு பிறகுதான் தெரிய வரும் என கூறப்படுகிறது.
அதேபோல் புதுக்கோட்டை அடுத்த அறந்தாங்கி சாலையில் உள்ள முத்துப்பட்டினம் கிராமத்தில் உள்ள எஸ்.ராமச்சந்திரனின் சொந்த வீடு, கந்தர்வகோட்டை அருகே உள்ள அவருக்குச் சொந்தமான கல்குவாரி ஆகிய இடங்களிலும், எஸ்.ராமச்சந்திரனின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் அரசு அதிகாரிகளுக்கு வந்த ரைடு: சென்னையில் அண்ணா நகர், முகப்பேர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் ஆகியோரின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் கலச மஹால் கட்டடத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் நான்கு பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்படுமா அல்லது வேறு ஏதாவது முறைகேடு நடந்துள்ளதா என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சோதனையானது நாளை வரை நடைபெறும் எனவும் அதிகாரி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளன.
மேலும், முகப்பேர் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறையில் பணிபுரியும் பொறியாளர் திலகம் என்பவரது வீட்டிலும், துப்பாக்கி ஏந்திய மத்திய காவல்படை பாதுகாப்புடன் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் சோதனை முடிவடைந்துள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நாளை அறிக்கை வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டீசல் வாகனங்களுக்கு 10சதவீதம் ஜிஎஸ்டி வரி உயர்வு? - நிதி கட்காரி கூறுவது என்ன?