சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட வெளி மாவட்டங்களில், சுமார் 30 இடங்களில் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு தொடர்புடைய இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்.26) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் அரசியல் தொடர்பாக இல்லாமல், முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளன. முன்னதாக கடந்த வாரம் மணல் குவாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், 2.33 கோடி ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ தங்கம் மற்றும் 12 கோடி கணக்கு வைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருவாயை மறைத்து, சட்டவிரோதமாக பணத்தைக் குவிக்கும் முயற்சியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனைகள் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா தெருவில் உள்ள விஜயா அப்பார்ட்மெண்டில் (அடுக்குமாடி குடியிருப்பு) வசித்து வரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனை மேற்கொள்ளச் சென்றுள்ளனர். அப்போது சண்முகத்தின் வீடு பூட்டி இருந்ததால், அப்பார்ட்மெண்ட் உரிமையாளர் மற்றும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சண்முகம் வெளியூர் சென்றுள்து தெரிய வந்ததை அடுத்து, அவரது உதவியாளர் மூலம் வீட்டின் சாவி கொண்டு வரப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சண்முகம் வசித்து வரும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் ஜோதிகுமார் என்பவர் வசித்து வருகிறார்.
அவரது வீட்டிலும் சுமார் ஐந்து பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜோதிகுமார், பாஜகவின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் மற்றும் கமலாலய ஊழியர் ஜோதிகுமார் ஆகிய இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதால், இருவரும் நெருக்கமானவர்களா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும், அமலாக்கத் துறையினரின் சோதனை நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை பொழிச்சலூர் பகுதியில் மலைபோல் தேங்கிய குப்பைகளால் சுகாதாரக் சீர்கேடு!