சென்னை: சட்டவிரோதமான பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள நிலையில், அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை தயார் செய்யப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பிறகு இந்த வழக்கானது சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு இரு தினங்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அமலகத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகல்கள் செந்தில் பாலாஜியின் தரப்புக்கும் கொடுக்கப்பட்டன. மேலும் அவர் ஜாமீன் கூறி விண்ணப்பிக்கவும் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையின் சார அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதில் நடந்த மொத்த முறைகேடுகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மைய புள்ளியாக செயல்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் தனது தனிப்பட்ட லாபத்திற்காகவும் அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களின் விளைவாக கிடைக்கப்பெற்ற சட்டவிரோதமான வருமானத்தில் செந்தில் பாலாஜி நேரடியாக பணத்தை பெற்று இருப்பதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவரது உதவியாளர்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் இணைந்து இந்த யுக்தியை உருவாக்கி உள்ளனர் என்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் சில விவகாரங்கள் குறித்து செந்தில் பாலாஜி தமக்கு தொடர்பு இல்லை என விசாரணையின் போது கூறினாலும், போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக பணப் பரிமாற்றம் செய்தது, இவரது அதிகாரத்திற்கு கீழ் நடந்திருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி, பணத்தை அவரது சகோதரர் மற்றும் உதவியாளர்கள் மூலம் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் யார் யாருக்கெல்லாம் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுள்ளார்கள் என்பதெல்லாம் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட விரோதமாக பணத்தை பெற்று விட்டு அதை மறைத்துள்ளார், அந்த பணத்தை தனது குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து உள்ளார். இந்த விவரம் செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் அவரது உதவியாளர்களிடம் இருந்த தொடர்பு குறித்து விவரங்கள் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், உதவி பொறியாளர்கள் போன்ற பணி நியமன ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும் சமீப காலத்தில் செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாய், அவரது மனைவி வங்கி கணக்கில் 29 லட்ச ரூபாயும், அவரது சகோதரர் அசோக்குமார் வங்கி கனக்கில் 13 கோடி ரூபாயும், அவரது மனைவி வங்கி கணக்கில் 53 லட்ச ரூபாயும், அதேபோல் அவரது உதவியாளர் சண்முகசுந்தரம் வங்கிக் கணக்கில் 2 கோடி ரூபாயும் இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதையெல்லாம் இவர்கள் வருமான வரித்துறையில் காட்டிய கணக்கை விட அதிகமான ரொக்கமாக உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் செந்தில் பாலாஜியை மைய புள்ளியாக வைத்தே இந்த அனைத்து முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக வரைபடமாக வரைந்து இந்த ஊழல்கள் எப்படி நடந்தது என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையில் காண்பித்துள்ளனர்.
யாரிடமெல்லாம் பணம் வசூல் செய்தார்கள், யார் மூலமாக வசூல் செய்தார்கள், இந்த பணமெல்லாம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எப்படி சென்றது என்பதை எல்லாம் ஆவணங்களுடன் இந்த குற்றப்பத்திரிக்கை குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் டிஜிட்டல் ஆவணங்கள் இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே அடுத்த முறை செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்போது அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து அவரிடம் அவர் தரப்பு வாதங்களும் நீதிபதிகள் கேட்டு பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் யாரெல்லாம் வாக்குமூலம் கொடுத்தார்களோ அவர்கள் அடுத்தடுத்தபடியாக நீதிமன்றங்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவார்கள் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.