சென்னை: அதிக வட்டி தருவதாக மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிறுவனம் தொடர்பாக தொடர்ந்து இயக்குநர்களையும், தரகர்களையும் அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நிறுவனம் தொடர்பான சொத்துக்களையும் வங்கி கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முடக்கி வருகின்றனர்.
குறிப்பாக 84 ஆயிரம் பேரிடம் இருந்து சுமார் 6000 கோடி முதலீடு பெற்று ஏமாற்றிய ஐஎப்எஸ்(international financial services) நிறுவனத்தின் மீதான வழக்கின் விசாரணை அதிகாரியாக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இதில் மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.
குற்றவாளிகள் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை செய்து ரூ.1.12 கோடி, தங்கம் மற்றும் வெள்ளி (பொருட்கள் 34 லட்சம்) 16 கார்கள், குற்றவாளிகளுக்கு சொந்தமான 49 அசையாத சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவின் இந்த நடவடிக்கைகள் மற்றும் தொடர்பான ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்து விசாரணையை துவக்கி உள்ளது.
இந்தநிலையில் ஐஎஃப்எஸ்(IFS) நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வரும் டிஎஸ்பி கபிலன், கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க குற்றம்சாட்டப்பட்ட நிறுவன நிர்வாகிகளிடமிருந்து 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக டிஎஸ்பி கபிலனிடம் துறை ரீதியாக கடந்த இரண்டு நாட்களாக தீவிர விசாரணை நடத்தி, அவரது நீலாங்கரை வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையில் டிஎஸ்பி அதிகாரி வீட்டில் 30 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்ததையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக டிஎஸ்பி கபிலனை பணியிடை நீக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அடுத்தபடியாக டிஎஸ்பி கபிலன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு இந்த லஞ்ச புகாரில் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆன்லைன் கடன் செயலியால் கிருஷ்ணகிரி இளைஞர் தற்கொலை!