சென்னை: கடந்த ஆண்டு ஆருத்ரா கோல்டு என்ற தனியார் நிறுவனத்தில் 1 லட்சம் பணம் கட்டினால் அதற்கு 30 சதவீதம் வட்டி தருவதாக மக்களிடம் கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தனர். பின்னர் ஆருத்ரா நிதி நிறுவனம் தொடர்புடைய 26 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. அந்த அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மோசடி குறித்து சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தொடர்ச்சியாக பல புகார்கள் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் பல்வேறு சட்டபிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், ஆரூத்ரா கோல்ட் நிறுவன மோசடி தொடர்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களில் 37 இடங்களில் ஆருத்ரா நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் என மொத்தம் 57 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், சுமார் 1,09,255 பொதுமக்கள் இந்நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதும், அதன் மொத்தத் தொகை சுமார் ரூ.2,438 கோடி என தெரிய வந்துள்ளது. இதுவரை மோசடியில் ஈடுபட்ட 16 பேரில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், ஹரீஷ், பேச்சிமுத்துராஜ் என்ற ரபீக், ஐயப்பன், ரூசோ, நாகராஜ், மாலதி ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
மேலும் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர், கிழக்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த உஷா, பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த தீபக் கோவிந்த் பிரசாத், பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்த நாராயணி, செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரூமேஷ்குமார் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.
மேலும் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருக்கும் நபர்கள் குறித்து தகவல் கிடைத்தால் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர். அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் உறுதியானதாக இருப்பின், அதற்காக தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
தகவல் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும், நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தகவல் தெரிவிப்பதற்காக பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகம், காவலர் பயிற்சி கல்லூரி, அசோக் நகர் என்ற முகவரியையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிவகங்கை மாவட்டத்தில் இரட்டை சகோதரிகள் குளத்தில் முழ்கி உயிரிழப்பு