அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் அமைச்சராக 2016 முதல் 2020ஆம் ஆண்டு இருந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்து குவித்துள்ளதாக புகார்கள் குவிந்தன.
28 இடங்களில் அதிரடி ரெய்டு
இப்புகார்களின் பேரில் இன்று (செப்.16) காலை கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது அவர் கணக்கு காட்டிய சொத்து மதிப்பு 25 கோடியே 99 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில்,2021 ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 56 கோடியே 60 லட்சத்து 86 ஆயிரத்து 585 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு மேல் 654% சொத்துக் குவிப்பு
மேலும் கே.சி.வீரமணியின் நான்கு ஆண்டு வருமானம் 4.40 கோடி ரூபாயாக இருந்தது. அதில் 2.56 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில், மீதம் ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் கே.சி.வீரமணி 28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758 ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனது மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலத்தை வாங்கி இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, 80 லட்சம் எனக் குறைத்துக் காட்டி சொத்து சேர்த்துள்ளார். இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு சுமார் 654 விழுக்காடு அதிகமாகியுள்ளது. இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.