சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி, மேம்பாட்டு கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு அத்துறைக்கான தரவு அலகு ஒன்றை இன்று (டிசம்பர் 27) திறந்துவைத்தார்.
அந்தக் கட்டடத்தின் அருகில் மா. சுப்பிரமணியன் செய்தியாளரைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டது. மாணவர்கள் நடந்து சென்ற தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பிரிவு கட்டடம் அதிமுக ஆட்சியில் 2016ஆம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதற்கான கல்வெட்டு கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் இந்தக் கட்டடத்திற்குப் பலமுறை வருகைதந்து நேரில் ஆய்வு செய்துள்ளார். கட்டடம் செயல்பாட்டிற்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிர்வாக அலுவலகக் கட்டடம் அமைக்கப்பட்டுவருகிறது. இதை முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் 10 நாள்களில் திறந்துவைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டைல்ஸ் வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணத்தைப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஆய்வு செய்துவருகிறார்கள். வெடிப்பு ஏற்பட்ட டைல்ஸ்களை அகற்றிவிட்டு புது டைல்ஸ்கள் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. டைல்ஸ் வெடிப்பு சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள்: 8 வாரங்களில் அகற்ற உத்தரவு