சென்னை: எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் மேம்படுத்தப்பட்ட அவசரகால ஆம்புலன்ஸ் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நோயாளிகளாக சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தங்குவதற்கு செட் அமைத்து தரப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் குடிப்பதற்குத் தேவையான குடிநீர் வசதி இல்லாமல் இருந்தது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிதி உதவியுடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் இந்த மருத்துவமனைக்கென மேம்படுத்தப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவத்தில் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக, உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுகப்பிரசவம் குறைய காரணம்?
"2020-2022ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவங்கள் 43 சதவீதமாக இருந்தது. தற்போது 38 சதவீதமாக குறைந்துள்ளது. இது பூஜ்ஜியம் என்ற நிலையை அடைய வேண்டும். முன்பெல்லாம் பெண்கள் பேறு காலத்தில் சலிக்காமல் கடைசி வரை உழைத்தனர். இதனால் அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆனது. ஆனால் தற்போது மகளிர் அப்படியெல்லாம் உழைப்பதில்லை. எனவே கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக யோகா போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
சுகப்பிரசவத்திற்கு அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். எழும்பூர் அரசு தாக்ஸை மருத்துவமனையில், சிகிச்சைக்காக குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள் ஆதரவற்ற நிலையில் தங்குவதற்கு இடமின்றி பெரிதும் சிரமப்படுகின்றனர். கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் பெற்ற பங்கு தொகையாக ஒரு கோடியே 23 லட்சம் ரூபாயை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான முதலமைச்சரிடம் அளித்தோம்.
மேலும், மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ், 2 கோடிய 46 லட்சம் சேர்த்து 3 கோடியே 69 லட்சம் செலவில் 12,000 சதுர அடியில் தங்கும் விடுதிக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு வரும் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்த கட்டடத்தில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இங்கு தங்கும் பெற்றோருக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்குவதற்காக இந்தியன் ஆயில் சார்பில் 25 லட்சம் ரூபாய் செலவில் சமையல் கூடம் அமைத்து தரப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் மீது தேவையற்ற அவதூறுகளை பரப்ப முயல வேண்டாம்.
எங்கு குறைகள் இருந்தாலும் கூறினால், அதனை நேரடியாக சென்று ஆய்வு செய்து சரி செய்து தருவோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அரசு மருத்துவமனைகளில் அதிகளவில் படுக்கை வசதிகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில், 99,000 படுக்கை வசதிகள் உள்ளது. ஆனால் பிற மாநிலங்களில் படுக்கை வசதி குறைவாக உள்ளது. லேப் டெக்னீசியன்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு