சென்னை: அஜித் நடிப்பில் உருவாகி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்திருந்த இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இப்படம் தமிழ்நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் உள்ள விஆர். வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கிலும் துணிவு படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 14) இரவு 7.15 மணி காட்சி வழக்கம் போல் திரையிடப்பட்டது. அங்குள்ள XL பெரிய திரையில் படம் திரையிடப்பட்டது.
படம் தொடங்கி இடைவேளை வரும் போது புரொஜக்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு படம் நிறுத்தப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் காட்சி திரையிடப்பட்டது. ஆனால், மீண்டும் புரொஜக்டரில் கோளாறு ஏற்பட்டதால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்கு நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியதால் போலீசார் வந்து திரையரங்கு நிர்வாகிகளுடன் இணைந்து ரசிகர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பல மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் என்று திரையரங்கு நிர்வாகம் அறிவித்தது. ஆன்லைன் புக்கிங் செய்தவர்களுக்கு பணம் திரும்ப தரப்படமாட்டாது என்று கூறியதால் மீண்டும் பிரச்சினை எழுந்தது. பின்னர் ரசிகர்கள் மீண்டும் வாக்குவாதம் செய்ததால் டிக்கெட் பணம் திருப்பி தரப்படும் என்று கூறியுள்ளனர்.