சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(பிப்.22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 37.4 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 34.6 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில் 35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்த பட்ச வெப்பநிலையாக கொடைக்கானலில் 20.5 டிகிரி செல்சியஸ், குன்னூரில் 23 டிகிரி செல்சியஸ், உதகமண்டலத்தில் 24.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும். பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படும். இரவு நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக காணப்படுகிறது. இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். அதன் மூலம் பனியின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் நில அதிர்வா? குலுங்கிய கட்டடங்கள்