சென்னை: சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி (31). இவர் 10 வருடத்திற்கு முன்பு பாரதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த பழனி கடந்த இரு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் மனைவி பாரதி, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள டீக்கடையில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வந்தார். இதனால் மனைவி பாரதி மீது சந்தேகம் அடைந்த பழனி வேலைக்கு செல்லக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மனைவி செல்லும் இடத்தினை பின் தொடர்ந்து சென்று தகராறில் ஈடுபட்டு மனைவியை தாக்கி வந்தார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் மனைவி மீது சந்தேமடைந்த பழனி மனைவி வேலை செய்யும் கடைக்கு மதுபோதையில் சென்றார். அப்போது மூன்றாவது மாடி கழிவறைக்கு சென்ற மனைவி பாரதியை பின் தொடர்ந்து சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பாரதியின் தலையை சுவற்றில் இடித்து கீழே தள்ளி உள்ளார். பின்னர் ரத்தவெள்ளத்தின் கிடந்த பாரதியை கட்டியணைத்து அருகில் படுத்துக் கொண்டார். அருகிலிருந்த நபர்கள் பாரதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாரதி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பழனியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுபோதையில் மனைவியை தாக்கிவிட்டு பழனி கட்டி அணைத்து உறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஹோட்டலில் உணவருந்திவிட்டு செல்கையில் பெண்ணிடம் செயின் பறிப்பு - போலீஸ் விசாரணை!