சென்னை புறநகரில் தாம்பரம் மாநகர காவல் நிலைய எல்லையில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னை, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கும்பல் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தாம்பரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. பின்னர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டவர்களை மதுவிலக்குபிரிவு போலீசார் தேடி வந்த நிலையில் தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த பாலாஜி என்ற மிட்டாய் பாலாஜி(26), மேற்கு தாம்பரம் காந்தி நகர் 2வது தெருவை சேர்ந்த அஜய் என்ற அஜித் குமார்(22), கடப்பேரி நேரு நகரை சேர்ந்த சச்சின் என்ற காளியா(22) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 53 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
தனிப்படை போலீசார் இந்த கும்பலிடம் விசாரணை நடத்திய போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஹைதராபாத்தை சேர்ந்த புரோக்கர்கள் மூலம் ரயிலில் அங்கு சென்று சட்ட விரோதமாக தூக்கத்திற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை 100 மாத்திரைகள் எட்டாயிரம் ரூபாய்க்கு வாங்கி, சென்னை புறநகர் பகுதியில் ஒரு மாத்திரை 350 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கொடுத்து இந்த மாத்திரைகளை கரைத்து நரம்பு வழியாக போதை ஊசி போட்டு அவர்களை போதைக்கு அடிமையாக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது. ஒரு மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் நரம்பில் செலுத்திக் கொள்ளும் இளைஞர்கள், ஒரு நாள் முழுவதும் பசி தூக்கம் இல்லாமல் போதையில் இருப்பார்களாம். இந்த போதைக்கு அடிமையாகி ஏராளமான இளைஞர்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கெட்டுப்போன உணவு வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்டதா?!- நடந்தது என்ன?