ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதைப்பொருட்களால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்து மாணவர்களும், இளைஞர்களும் அறிந்துகொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டன.
சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமையில் போதைப்பொருட்களால் ஏற்படும் விழிப்புணர்வு குறித்து பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இதேபோல் திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சேலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை அம்மாவட்ட ஆட்சியர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி திருவள்ளூவர் சிலை பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி பெரியார் சிலை வழியாக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
கன்னியாகுமரியில் சற்று வித்தியாசமான முறையில் "போதையில்லா வாழ்வை நேசி" என்ற மையக்கருத்தில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து நாகர்கோவில் வரை தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது.
அரியலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணி மார்கெட் தெரு, தேரடி, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக சென்று ஒற்றுமை திடலில் முடிவடைந்தது.