பெரியார் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும்விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ரஜினிகாந்த் வீட்டை முற்றுகை செய்ய முயன்றனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதில் 50-க்கும் அதிகமானோர் பங்கேற்று ரஜினிகாந்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் உமாபதி பேசுகையில், ”துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் மீது அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றோம்.
மேலும் அவர் மீது புகாரும் அளித்துள்ளோம். ஆனால் தமிழ்நாடு அரசும் காவல் துறையும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டுகின்றது.
தமிழ்நாடு பெரியார் மண். ரஜினிகாந்த் பெரியாரை சீண்டினால் அவரின் ஒரு படம்கூட தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் ஓடாது. அடுத்ததாக ரஜினிகாந்தின் வீட்டை முற்றுகையிட்டு, அவரின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'பெரியாரை முழுமையாகத் தெரிந்துகொண்டு பேசவேண்டும்' : ரஜினியை சாடிய ஓபிஎஸ்