சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் சனாதன தர்மத்தை பற்றி பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பாகச் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (ஜூன்.16) நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், சுப.வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 21 மசோதாக்களையும் ஆளுநர் ஊற வைத்து ஊறுகாய் போட்டுக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் பஜனை கூடாரமாக மாறி விட்டது. ஆளுநருடைய செயல்பாடு ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை முடக்குவதற்காக ஆளுநர் ஆர்எஸ்எஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளார்.
ரிஷிகளையும், ஞானிகளையும் நம்பும் ஆளுநர் ரவி எதற்காகப் பீகாருக்கு அறிவியல் கண்டுபிடிப்பான விமானத்தில் செல்கிறார். ஆளுநர் பேசிய கருத்துக்கள் தொலைக்காட்சி எனும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தான் நாம் அறிந்து கொள்கிறோம். ஆளுநர் உடைய சனாதனத்தை பற்றிய கருத்து அவருடைய அறியாமையைக் காட்டுகிறது.
ஆளுநராக பதவியேற்கும் போது எடுத்து கொண்ட பிரமானத்தையும், இந்திய அரசியலைப்பு சட்டத்தையும், இறையாண்மையையும் மீறும் வகையில் ஆளுநரின் மனுதர்மம், சனாதன தர்மம் என்று பேச்சு இருக்கிறது. ஆளுநர் தனது கருத்தைத் திரும்பப் பெற்று, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாத பட்சத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடைபெறும்" என்று கூறினார்.