சென்னை: வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த தேடப்படும் குற்றவாளி 12 ஆண்டுகளுக்கு பிறகு எத்தியோப்பியா நாட்டிலிருந்து பயணிகள் விமானத்தில் வந்தபோது சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு ஆந்திர மாநில போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டி (48). இவர் மீது விஜயவாடா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2011 ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமை வழக்கு பதிவாகி இருந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இவரை கைது செய்ய தீவிரமாக தேடி வந்த நிலையில் போலீஸிடம் சிக்காமல் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இதையடுத்து விஜயவாடா மாநகர போலீஸ் கமிஷ்னர், பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசியும் போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட்7) எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்தனர்.
அப்போழுது பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியின் பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்த போது இவர் ஆந்திர மாநில போலீசாரால் கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. இதையடுத்து பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியை குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் சென்னை விமான நிலைய போலீசார் சிறை வைத்தனர்.
மேலும் குடியுரிமை அதிகாரிகள் ஆந்திர மாநிலம் விஜயவாடா மாநகர போலீஸ் கமிஷனருக்கு 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி பிடிபட்டு உள்ளார் என்ற தகவலை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆந்திர மாநில தனிப்படை போலீசார் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்து தலைமறைவு குற்றவாளியான பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியை கைது செய்து பாதுகாப்புடன் விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றனர். 12 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தது அமலாக்கத்துறை!