கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக பெண்கள் மீது நடக்கும் வன்முறை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வருத்தம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி கூறுகையில், ”மாநில கட்டுப்பாட்டு அறைக்கு பெண்கள் மீது நடக்கும் வன்முறை தொடர்பாக ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 25 புகார்கள் வருகின்றன. வன்முறை தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக அனைத்து மகளிர் காவல் துறையினரும் அப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பணியில் ஈடுபடும் பெண் காவல் துறையினர் ஊரடங்கினால் வீட்டிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஏற்கெனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது வன்முறையை நடத்திய நபர்களை காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக 4 சுவர்களுக்குள் நடக்கும் வன்முறையால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும் வெளிமாநிலப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பகுதியில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல், விடுதிகள் ஆகிய இடங்களுக்கு காவல் துறையினர் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: லைக்ஸ்க்காக மது விற்று வீடியோ வெளியிட்டு கம்பி எண்ணும் நபர்!