காவல் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், ”விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
பல இடங்களில் விநாயகர் சிலைகளை காவல் துறையினர் அகற்றும் வீடியோ பார்ப்பது வருத்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட சில கட்டுப்பாடுகள் விதித்து அரசு வழிகாட்டுதலோடு அனுமதி வழங்குவதற்கான அறிவிப்பை இன்றே முதலமைச்சர் வெளியிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு விளக்கமளித்து பேசிய முதலமைச்சர், விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாது என அரசு சொல்லவில்லை. ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படிதான் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் கட்டுக்குள் இன்னும் வரவில்லை. பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாட, ஒன்று கூடி ஊர்வலமாக செல்ல மட்டும்தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவர் வீடுகளில் உரிய வழிமுறைகள் பின்பற்றி சிலை வைத்து கொண்டாடலாம்” என்றார்.