சென்னை: வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்த 800க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவராகப் பணிபுரிய காத்திருக்கின்றனர். அவர்கள் பயிற்சி மருத்துவத்தை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர்.
அப்போது, அதற்கான அரசணையை உடனடியாக வெளியிட வேண்டும்; வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சி மருத்துவராக சேர்வதற்கு ரூ.2 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது என்பதால், இந்தக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக்கால உதவி ஊதியத்தையும் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஏற்று தேசிய மருத்துவ ஆணையம் அவற்றை நடைமுறைப்படுத்திட வேண்டுமென அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
தமிழ்நாடு அரசும் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை ஜூலை 29 அன்று வெளியிட்டது. ஆனால், அதை நடைமுறைபடுத்துவதற்கான அரசாணையை இதுவரை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. இதனால் வெளிநாட்டில் படித்த மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, இதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.
இதன்மூலம் வெளிநாட்டில் படித்த இந்த மருத்துவ மாணவர்கள் பயன்பெறுவதோடு தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும் பயன்பெறுவர் எனவும்;பயிற்சி மருத்துவர்களோ, பட்ட மேற்படிப்போ இல்லாத இந்த 11 மருத்துவக்கல்லூரிகளும் பயனடையும் என்றும்; இந்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் எனவும் சென்னையில் நடந்த போராட்டத்தில் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: விசாரணை கைதி விக்னேஷ் வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி