சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சரின் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் முனைவர் பட்டங்களை பெற்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில் 731 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரி, தொலைதூரக் கல்வி ஆகியவற்றில் பயின்ற ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 662 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளர் நிலை 3 எம்.எஸ்.சண்முகம் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஐஏஎஸ் அலுவலர்களான மகேஸ்வரி, ஆனந்தகுமார், பாஸ்கர், சீனிவாசன் ஆகிய 6 பேர் முனைவர் பட்டங்களைப் பெற்றனர் .
மேலும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த 2011 முதல் 15 வரையிலான காலகட்டங்களில் தமிழ் வளர்ச்சித் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ததற்காக முனைவர் பட்டம் பெற்றார். முன்னாள் உயர் கல்வி அமைச்சரும், திமுக பிரமுகருமான பழனியப்பன், மருத்துவ தாவரங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டத்தைப் பெற்றார் .
இதேபோன்று உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயனின் மனைவி லீலாவதி இயற்கைச் சீர்கேடுகள் மற்றும் பேரிடர் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றார்.
இதையும் படிங்க : சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - "காவல்துறையிடம் கேளுங்கள்" - ஜெயக்குமார் ஆவேசம்