தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களும், மருத்துவத் துறை பணியாளர்களும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவர்கள் இரண்டு பேருக்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை தரமானதாக உள்ளதாக பாதிக்கப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு கடந்த எட்டாம் தேதி மூச்சுத்திணறல் வந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தனி வார்டில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். 14 நாள்கள் தொடர் சிகிச்சையின் மூலம் அவர் பூரண குணம் அடைந்தார்.
மேலும் அவரை நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப்போது தனக்கு சிகிச்சை அளித்த ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கும் தனது பேராசிரியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், ”கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். எனக்கு இங்கு எனது பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளித்தனர். மேலும் விலை உயர்ந்த மருந்துகளை வழங்கி சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சையின்போது எனது நண்பர்கள் சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினர். ஆனால் நான் இந்த மருத்துவமனையில் பணிபுரிந்ததால் இங்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பார்கள் என்பது எனக்கு தெரியும். எனவே நான் இந்த மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தேன்.
அதேபோல் தற்போது எனது குடும்பத்திலிருந்து மனைவி, மகள் உள்ளிட்ட எந்த உறவினரும் என் அருகில் இல்லாத நிலையிலும் இங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் அன்பாகவும், நன்றாகவும் சிகிச்சை அளித்ததால் நான் பூரண குணமடைந்து வீட்டுக்கு செல்கிறேன்” என்றார்.
பின்னர் அந்த மருத்துவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவரை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் ஜெயந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஒரு குரங்குக்கு இருக்கும் அறிவு கூட மனிதனுக்கு இல்லை - எம்.எஸ். பாஸ்கர்