.தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கிவருகின்றனர். ஏற்கனவே, பயிர்கடன் தள்ளுபடி, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு, ஜல்லிக்கட்டு வழக்குகள் திரும்பபெறுதல் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் வேலைவாய்ப்பு, தரமான உயர் கல்வி, ஊரக கட்டமைப்பு என ஏழு உறுதிமொழிகளை அளித்து அதிமுகவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் டஃப் கொடுத்துள்ளார்.
வளரும் தமிழ்நாடு - ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.
மகிழும் விவசாயி - 10 லட்சம் ஹெக்டேராக உள்ள இருபோக நிலங்கள், 20 லட்சமாக உயர்த்தப்படும்.
குறையாத குடிநீர் - குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனி நபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பு ஆண்டுக்கு 9 லட்சம் லிட்டரிலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படும்.
உயர்தர கல்வி, மருத்துவம் - கல்வி, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து செலவிடப்படும் நிதியளவு மூன்று மடங்கு உயர்த்தப்படும்.
அனைவருக்குமான தமிழ்நாடு - குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும். தொழில்நுட்பம் அடுத்த கட்டத்திற்கு சென்றபோதிலும், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிவருகின்றனர். இந்த அவலம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
எழில்மிகு மாநகரங்களின் மாநிலம் - புதிதாக 9.75 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். இதன் மூலம் குடிசை வாழ் மக்களின் அளவு 16.6 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்படும்.
உயர்ந்த வாழக்கை தரம் - இணையவசதியை அனைத்து தரப்பினருக்கும் எடுத்து செல்லும் வகையில் எல்லா கிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும்.