சென்னை: இந்தியை மீண்டும் ஒன்றிய அரசு திணிக்க திட்டமிட்டுள்ளது எனவும், இதனை எதிர்த்து வருகிற 15ஆம் தேதி அனைத்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச்செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் கருத்தியலை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த முற்படுகிறது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் (11வது தொகுதி), ஒன்றிய அரசு நடத்தும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் ஒன்றிய பல்கலைக்கழகங்களான உயர் கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது இந்திப் பேசாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு எதிரானது.
மேலும், ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது இந்தியைப் படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கி, இந்திப் பேசாத மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் மறைமுக சதித் திட்டமாகக் காட்சியளிக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமை கொண்ட மொழிகளாகும் என்ற நிலையை திடீரென்று மாற்றி, இந்தியைப் பொது மொழியாகத் திணிப்பது எதேச்சாதிகாரமானது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், அனைத்துப் பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலுள்ள கல்லூரிகளின், அனைத்துப் பாடத் துறைகளுக்கும், தேசிய தேர்வு முகமை மூலமாக ஒரே பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற திட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதும், மாநில உரிமைகளை அடியோடு பறிக்கக்கூடியதாகவும், சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகவும் உள்ளது.
இந்த நுழைவுத்தேர்வு முறை என்பது, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இது அனைவருக்குமான சமஉரிமை - சமவாய்ப்பு ஆகிய கோட்பாடுகளை அழிக்கக்கூடியது என்பதால் திராவிட முன்னேற்றக்கழகம் இந்த இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்க்கிறது.
பலமொழி கொண்ட இந்திய துணைக் கண்டத்தில், அவரவர் மொழி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய பன்முகத் தன்மையைச் சிதைத்து விட்டு, ’இந்தி’ என்ற ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக ஏற்கனவே புதிய தேசியக் கல்விக்கொள்கை அமைந்துள்ளது. ஆகவே, ஒன்றிய பாஜக அரசின் இந்தித்திணிப்பை திமுக இளைஞர் அணியும் - மாணவர் அணியும் கடுமையாக எதிர்க்கிறது.
அலுவல் மொழிச்சட்டத்தின் வாயிலாகவும், இந்திய அளவில் அனைத்துப் பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வுத் திட்டத்தின் மூலமாகவும் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையும் தெரிவித்துள்ளதை உணர்ந்து உடனடியாக அதனை ஒன்றிய பாஜக அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி - திமுக. இளைஞர் அணியும் - மாணவர் அணியும் இணைந்து, வரும் 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அறிவிக்கிறது. தெற்கில் ஒலிக்கும் நமது கண்டனக் குரல் செங்கோட்டையில் எதிரொலிக்கும் விதமாக அமைந்திட அணிதிரண்டு வாரீர்.. வாரீர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.