சென்னை: கிண்டியில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று காலை 11 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் என்று குற்றம்சாட்டி 97 பக்க புகார் மனுக்களை கொடுத்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டுவரை அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இந்த நான்கு வருட ஆட்சி காலத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் கரை படிந்துள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முதலமைச்சர் பழனிச்சாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலை துறையில் நடைபெற்ற ஊழல், மத்திய அரசு கொடுக்கும் அரசியை வெளி சந்தையில் விற்று நடைபெற்ற மாபெரும் ஊழல், வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு ஊழல் என ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளேம்.
இதே போல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றமே ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் நடவடிக்கை இல்லை.
மேலும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு லஞ்ச ஒழிப்பு துறையிடம் கொடுத்து இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதரங்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் கொடுத்துள்ளோம். சட்ட விதி 17A-இன் படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியும். இதை பயன்படுத்தி லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆளுநர் ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிற்பிக்க வேண்டும்.
அதே போல் மேலும் பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. அதற்கான ஆதாரங்கள் குறித்து திமுக வழக்கறிஞர் அணி ஆய்வு செய்து வருகின்றது. அதிமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளில் இது முதல் பகுதி தான். போதிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் இரண்டாம் பகுதி புகார் மனுக்கள் அளிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, இந்த புகார் மனு மீது ஆளுநர் தன்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார் எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆளுநருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்