மறைந்த மக்களவை உறுப்பினர் எச். வசந்தகுமார் நினைவேந்தல் நிகழ்வு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "கரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றினால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரை இழந்திருக்கிறோம். எப்போதும் சிரித்த முகம்தான் அவரோட வெற்றிக்கு காரணம். எல்லா நிறுவனத்துக்கும் ஒரு பிராண்ட் வைத்திருப்பார்கள். அந்த பிராண்ட் தான் அந்த நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் வசந்த் அண்ட் கோ-வின் வெற்றிக்கு உண்மையான காரணம், வசந்தகுமாரின் சிரிப்பு தான்.
இந்நாட்டு இளைஞர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய உண்டு. வசந்தகுமாரின் வாழ்க்கையைப் படிப்பதன் மூலம் இளைஞர்கள் மிகப்பெரிய உயர்வை அடைய முடியும் என்று நான் கருதுகிறேன். வசந்தகுமார் வாழ்க்கை மட்டுமல்ல; மரணமும் நமக்கு சில பாடங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
அனைவரும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். தடுப்பு ஊசியும் இல்லை, நோய் வந்தால் சிகிச்சைக்கு மருந்தும் இல்லை என்ற நிலையில் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம். வசந்தகுமார் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: 'பனங்காட்டில் பிறந்து உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார்' - பாரதிராஜா இரங்கல்