திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் நேற்று காலாமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன் கைப்பட இரங்கல் கடிதம் எழுதி வெளியிட்டிருந்தார். இந்தச் சூழலில், அன்பழகன் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் பண்புடன் பழகிய பேராசிரியர் அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர், நேரில் வந்து மரியாதை செலுத்திய துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர், தோழமைக் கட்சித் தலைவர்கள், கலையுலகத்தினர், பலதுறைகளையும் சார்ந்த சான்றோர்கள் என அனைவருக்கும் திமுக என்கிற அரசியல் குடும்பத்தின் தலைவன் என்ற முறையில் கண்ணீர் கலந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
எனது தந்தையை நீண்ட காலம் பிரிந்திருக்க மனமின்றி, நீங்களும் அவர் சென்ற இடத்திற்கே எம்மைத் தவிக்கவிட்டு சென்றுவிட்டீர்கள்; போய்வாருங்கள் பெரியப்பா. திராவிடச் சிகரமாக, இனமான இமயமாக உயர்ந்து நிற்கும் உங்கள் புகழினைக் கட்டிக்காத்திடும் வகையில், நீங்கள் வழங்கிய ஆலோசனைகளோடும், முன்னாள் தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புகளோடும் லட்சியப் பாதையில், எங்கள் பயணம் தொடரும்.
தமிழ் இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றைக் காக்கும் திராவிட இயக்கத்தின் சளைக்காத நெடும்பயணத்தை நீங்கள் தந்த சுடரினை ஏந்தி, அந்தச் சுடரொளியில் தொடர்ந்திடுவோம். பெறப் போகும் வெற்றி மலர்களை, உங்கள் இருவருக்கும் காணிக்கையாக்கிடுவோம்! இது உறுதி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனவு நிறைவேறும்... போய் வாருங்கள் "இனமான" பேராசிரியரே!