இந்து கடவுள்களை அவமதித்ததாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அந்தச் சேனலுடன் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளைக் கைதுசெய்தனர். இந்நிலையில், ”கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்குச் சட்டப்பூர்வமான ஆதரவளிக்கப்படும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததாகக் கூறி பதிவு ஒன்று ட்விட்டரில் வைரலாகப் பரவியது.
அந்த ட்விட்டர் பக்கமானது ஸ்டாலின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்டு, திமுகவைக் களங்கப்படுத்தும் வகையில் அடையாளம் தெரியாத நபர்கள் செய்த வேலை என அக்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த சில நாள்களுக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயரில் போலி கணக்கு தொடங்கி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தனர். அப்புகாரிபேரில், மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்கு மட்டும் பதிவு செய்துவிட்டு, நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புகாரளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவதூறு பரப்புவதாகக் கொடுக்கப்படும் புகார்கள் தொடர்பாக நீதிமன்றத்தை நாட வேண்டும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். போலியாக கணக்கு தொடங்கி களங்கம் செய்த விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது.
நீதிமன்றத்தை நாடினாலும் காவல் துறையில் புகார் அளித்துள்ளீர்களா என நீதிமன்றம் கேள்வியெழுப்பும். கறுப்பர் கூட்டத்திற்கு எவ்விதத்திலும் திமுக ஆதரவு தெரிவிக்கவில்லை. திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை கண்டிப்பாக நாடுவோம்” என்றார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு; கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு ட்வீட்' - நீதிமன்றத்திற்குச் செல்லும் திமுக