சென்னை: தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜன.1) நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது பெண் காவலரிடம் 2 இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர் கதறி அழுததை பார்த்த சக போலீசார் இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம் (24) என்பதும், இருவரும் திமுக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்தது.
பின்னர் இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லும் போது திமுக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா மற்றும் கவுன்சிலர் ஆகியோர் ஆய்வாளரிடம் பிரச்னையை பெரிது படுத்த வேண்டாம் என சமரசம் செய்ததால் வழக்குப் போடாமல் இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவலர் திமுக நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் கோயம்பேடு துணை ஆணையர் குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் கூட்ட நெரிசலில் தெரியாமல் கைபட்டு விட்டதாகவும், எந்த நோக்கமும் இல்லை எனக் கூறி பெண் காவலரிடம் மன்னிப்புக்கேட்டு திமுக நிர்வாகிகள் பெண் காவலரிடம் கடிதம் எழுதி கொடுத்தனர்.
மன்னிப்பு கடிதத்தை ஏற்ற பெண் காவலர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண் காவலர் விடுப்பில் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே காவல் உயரதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பெண் காவலரிடம் புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியதால், வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள், பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல் துறையையின் பொறுப்பாளராக இருக்கக்கூடிய இந்த கையாளாகாத முதலமைச்சருக்கு எனது கடுமையான கண்டனங்கள்.
இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது விடியா ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து,கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல் துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.
மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக உத்தரவிட வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படங்க: தொடர் சர்ச்சையில் சிக்கும் TTF வாசன்.! காரின் நம்பர் பிளேட் இல்லாமல் வந்து அபராதம்!