தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர், மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றதால், மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஜூலை 30ஆம் தேதி வரை சுமார் ஒருமாதம் காலம் நடக்கிறது.
இக்கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் நடக்கிறது. இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் வருகின்ற திங்கட்கிழமை சபாநாயகர் தனபாலுக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவர உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது எவ்வாறு செயல்பட வேண்டும், தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான குடிநீர், பஞ்சம், வறட்சி உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை எவ்வாறு பேரவையில் எதிரொலிக்க வேண்டும், அதிமுக அமைச்சர்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னையை மின்னஞ்சலுக்கு அனுப்பினால் சட்டப்பேரவையில் திமுக குரல் எழுப்பும் என்று மு.க. ஸ்டாலின் அதிரடியாக அறிவித்திருந்தார். இதற்கு ஏராளமானோர் பல்வேறு பிரச்னைகளை தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, மக்கள் தெரிவித்துள்ள பிரச்னைகளை பேரவையில் எவ்வாறு எதிரொலிப்பது குறித்தும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.