சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது.
அப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சியினருடன் மாவட்டச் செயலாளர்கள் சுமூகமாக பேசி இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்று பதவிகளை எண்ணாமல் பொறுப்புடன் மக்கள் பணியாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சியில் இளைஞர்களை சேர்க்க வேண்டும். பூத் கமிட்டி அமைத்து, வெற்றிபெற உழைக்க வேண்டும்" என பேசியதாக தெரிகிறது. .
அதோடு பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஓராண்டு கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிபின் ராவத் உள்ளிட்டோரை மீட்ட தீயணைப்புத் துறையினரின் துயரம் - செவிசாய்க்குமா அரசு?