சென்னை, ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் ஐந்தாவது நாளாக இன்று தொடர் பரப்புரை மேற்கொண்டார். இன்று (மார்ச்.22), ராயபுரம் எம்.சி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியிவ், அம்மா உணவகம் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர், சைக்கிள் ரிக்ஷாவில் அமர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக அம்மா உணவகத்திற்கு வந்த மாற்றுத்திறனாளி ஒருவருடன் சரிசமமாக அமர்ந்து சிறிது நேரம் அவர் உரையாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "அதிமுகவின் எழுச்சி பெரும் அளவில் உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். ராயபுரம் திமுக வேட்பாளருக்காக பரப்புரை செய்வதற்குகூட ஆட்கள் இல்லை. முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் பெரும்பாலான இளைஞர்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
திமுகவின் அடக்கு முறை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக வாக்கு வங்கியின் அடையாளம் இரட்டை இலை. திமுகவின் தலைவர் ஸ்டாலின் நான் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தினாலே சுயேட்சை வேட்பாளர் போன்ற ஒருவரை எனக்கு எதிராக நிறுத்தியுள்ளார்" என்றார்.
இதற்கு முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் ஜெயக்குமார், குழந்தைகளை தூக்கிக் கொஞ்சியும், பெண்களுடன் உற்சாகமாகப் பேசியும் மக்களைக் கவர்ந்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.