கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகனின் உருவபட திறப்பு நிகழ்ச்சி திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் காணொலி காட்சி மூலம் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. அப்போது, மறைந்த ஜெ. அன்பழகனின் குடும்பத்தினர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி காணொலி மூலம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "இன்றைய தினம் மிகவும் மனம் சோர்ந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எனக்கு அருகில் இருந்து தினமும் செயல்பட்ட- பக்கத்து நாற்காலியில் இருந்து பொதுக்கூட்டங்களை நடத்திய என் சகோதரர் ஜெ. அன்பழகனை படமாக பார்க்க வேண்டி வரும் என்று நிச்சயம் நான் நினைக்கவே இல்லை.
அவரது இழப்பு ஒட்டுமொத்த சென்னைக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல. தலைமைக் கழகத்துக்கே ஏற்பட்ட இழப்பு. தமிழ்நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு. இன்னும் சொல்லப்போனால், தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட இழப்பு" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கரோனாவிலிருந்து மக்களைக் காக்க போராடியவர், கரோனாவுக்கே பலியாக வேண்டியதாகிவிட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தாளமுத்துவையும் நடராசனையும் இழந்தோம். இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் விருகம்பாக்கம் அரங்கநாதனை இழந்தோம் என்பதைப் போல கரோனாவிற்கு எதிரான போரில் ஜெ. அன்பழகனை இழந்தோம் என்று சொல்லும் அளவுக்கு வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார்.
ஜெ. அன்பழகன் குடும்பத்தினர் அனைவருக்கும் எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களது துன்ப துயரங்களில் நாங்களும் பங்கெடுக்கிறோம். என்றென்றும் துணை நிற்போம். மறைந்த ஜெ. அன்பழகன் உங்கள் குடும்பத் தலைவர் மட்டுமல்ல; எங்கள் அனைவர் குடும்பத்திலும் ஒருவர்" என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக, திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவர் கனிமொழி, எம்.பி தயாநிதி மாறன், எம்.பி கலாநிதி வீராசாமி, எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் எஸ். சுதர்சனம், எம்.எல்.ஏ., பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.