இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "‘ஆயிரம் நிலவே வா’ என்று, அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ஆட்சி நடத்தி, இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம். கரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அந்த அற்புத இசைக் கலைஞனைப் பிரித்துவிட்டது.
பரபரப்பான உலகில், இயந்திரம் போல் மாறிவிட்ட மக்களின் மன அழுத்தத்திற்கு இயற்கையான மாமருந்தாக வாய்த்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்! அவருடைய மறைவு, இசை உலகிற்கு பேரிழப்பாகும். நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களின் சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே இதனைக் கருதுகிறோம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள், பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். கருணாநிதியின் அன்பிற்குரியவர்.
இனிய பாடகர் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், தம்பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் அவரைப் பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார், இறவாப் புகழ் கொண்ட பாடகர் எஸ்.பி.பி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரை உலகில் இசையின் இமயமாக உயர்ந்து நின்றவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். அந்த இமயம் இன்று சரிந்து விழுந்துவிட்டது. நிரப்பப்ப முடியாத இடம் பாலுவின் இடம். இசைக்கடல், தன் ராக ஆலாபனை அலைகளை ஆடாமல் நிறுத்திக் கொண்டது. இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு எஸ்.பி.பி. புகழ் நிலைத்து நிற்கும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க...திரை வானில் என்றும் தேயாத பாடும் நிலா - எஸ்.பி. பாலு