மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தலைவருமான அமித்ஷா அண்மையில் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாகப் பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதைத் தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,’ எனப் பதிவிட்டிருந்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி உட்படப் பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தை அடுத்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் அனைத்தையும் புறக்கணித்து, இந்தி மொழி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பது, நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மொழி வாரி மாநிலங்களுக்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கும் எதிரானது. அவற்றிற்கு விடப்பட்டிருக்கும் சவால் என்றும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.