சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையில் வசிப்பவர் மோகனா (49). இவர் கடந்த 27 வருடமாக வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் சாலையோரம் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக 51ஆவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிரஞ்சனா என்பவரது கணவர் ஜெகதீசன், அப்பகுதியில் சாலையோரம் கடை நடத்திவரும் வியாபாரிகளிடம் தினமும் 200 ரூபாய் மாமூல் தரவேண்டும், இல்லையெனில் கடையை காலி செய்து விடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் அவர் சாலையோரம் துணிக்கடை நடத்தி வரும் மோகனாவை மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு மோகனா மாமூல் தரமுடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் தகாத வார்த்தையால் திட்டி, அவரை அடித்து, உடம்பில் கை வைத்துத் தள்ளி அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்கம் போல் மோகனா கடையிலிருந்தபோது அங்கு சென்ற நபர் ஒருவர் அண்ணன் ஜெகதீசன் மாமூல் வாங்கி வருமாறு கூறியதாக பணம் கேட்டுமிரட்டியுள்ளார். அதற்கு மோகனா பணம் கொடுக்க மறுக்கவே உடனே அந்த நபர் ஜெகதீசனுக்கு போன் செய்து மோகனாவிடம் கொடுக்க ஜெகதீசன் அவரை தகாத வார்த்தையில் திட்டி, கடையை காலி செய்து விடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து ஜெகதீசன் கூறியதன் பேரில் மாநகராட்சிக் குப்பை அல்லும் வாகனத்தில் வந்த சிலர், மோகனாவின் கடையை காலி செய்ய முயன்றனர். உடனே அங்கிருந்து வியாபாரிகள் ஒன்று கூடி கவுன்சிலர் கணவர் ஜெகதீசனுக்கு எதிராக கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், அவர்களை சமாதானம் செய்தனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் வியாபாரி மோகனா, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் ஜெகதீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தேடிவந்தனர்.
இந்நிலையில் ஜெகதீசன் மதுரையில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை காவல் துறையினர், மதுரை சென்று அங்கு பதுங்கியிருந்த ஜெகதீசனை கைது செய்து, நேற்று இரவு (டிச.30) சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கவுன்சிலர் ஜெகதீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் மது அருந்திக் கொண்டிருந்த போது அதனைத் தட்டி கேட்ட ரோந்து காவலர்களை மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்: குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 2000 போலிசார்!!