முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் நாக்கை அறுக்க தங்களின் தொண்டர்கள் தயாராக இருப்பதாகவும், அவர்களை அதிமுக தலைமை அடக்கி வைத்து இருப்பதாகவும் வைகைச்செல்வன் பேசியதாக திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணியை சார்ந்த முத்துக்குமார் தலைமையிலான வழக்கறிஞர்கள் இன்று(பிப்.13) டிஜிபி அலுவலகத்தில் வைகைச்செல்வன் மீது புகார் மனு அளித்தனர்.
அந்த புகாரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் முத்துக்குமார், அதிமுக அமைச்சரவையில் உள்ளவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் போது அவர்களுக்கு உடனடியாக கோபம் வருவதாகவும், அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது, அச்சுறுத்துவது மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தங்கள் தொண்டர்களை தூண்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
மேலும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வைகைச்செல்வன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
காஞ்சிபுரத்தில் குளத்தில் விழுந்து பெண் தற்கொலை - போலீசார் விசாரணை!