சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை சந்தித்து கன்னியாகுமரி தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அங்கு மறு தபால் வாக்கு நடத்த வேண்டும் என்றும் புகார் மனுவை வழங்கினார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கன்னியாகுமரி தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் ஓட்டுகள் மொத்தமாக 1833 உள்ளது. இவற்றில் 1761 தபால் ஓட்டுகள் பதிய பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த ஓட்டுகள் தேர்தல் விதிமுறைகளின் படி தபால் ஓட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை. தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
மேலும் 80 வயது முதியோரிடம் தபால் ஓட்டுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளிப்படையாக வாங்கிச் சென்றுள்ளனர். அப்படி வாங்கும் தபால் ஓட்டுகளை அங்கேயே கையெழுத்திட்டு மடித்து வைக்காமல் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று கையெழுத்திட்டு மடித்து சீல் வைத்துள்ளனர். எனவே, இந்த தபால் ஓட்டுகளை செல்லா ஓட்டாக மாற்றவும், குறிப்பிட்ட நபருக்கு ஓட்டு அளிக்கவும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளேன். ஓரிரு நாளில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்" என்று தெரிவித்தார்.