சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க நகர் பேருந்து நிலையத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
அண்ணா அறிவாலயத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு முழுக்க திமுக நிர்வாகிகள் வீடு, வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதில் அதிகமாக இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து அதிகமாகச் சேர்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, அவர் வழங்கிய கட்டளையை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சொந்த தொகுதி உள்ளடக்கியுள்ள கொளத்தூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் திமுக உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து உறுப்பினர் சேர்க்கைக்கு கையெழுத்து பெற்றார்.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் படிவங்களை பெற்றுக்கொண்டு அவர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார். தமிழ்நாடு செழிக்க திமுகவில் இணைவீர் என்ற பதாகையுடன் திமுகவினர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறும் இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் தங்கள் தொகுதிக்கு நேரில் வந்து உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கிவைத்தது குறித்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், நடந்து சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலினுடன் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
அப்பகுதியில் உள்ள திரு.வி.க நகரில், அண்மையில் மறைந்த அர்ச்சகர் கே.ஜி. இரவிச்சந்திரன் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவரது, படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர்களுடன் தேநீர் அருந்தினர்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வா.வேலு, பி.க.சேகர்பாபு மற்றும் வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் உடனிருந்தனர்.