கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அன்றாடம் தினக்கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் அத்தியாவசிய உணவின்றி தவித்துவருகின்றனர்.
உணவின்றி வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் மக்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கிவருகின்றனர். அதேபோன்று, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், எம்.ஜி.ஆர் நகர், கே.கே நகர் பகுதிகளில் வாழும் நலிவடைந்த பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் முகக்கவசங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக சுகாதார ஆய்வாளரிடம் அனுமதி பெற்று, வீட்டில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும்.
ஆனால், அனுமதியின்றி சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பொது மக்களுக்கு பொருட்களை வழங்கியதாகக் கூறி, கே.கே நகர், எம்ஜி.ஆர் நகர் காவல்துறையினர், தனசேகரன் உட்பட திமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறுதல், தெரிந்தே தொற்றைப் பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இ-வே பில்களின் செல்லுப்படியாகும் காலம் நீட்டிப்பு!