சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் சார்பில் இன்று (மார்ச் 04) காலை கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு அளித்த நிலையில், மாலை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
பிரேமலதா விஜயகாந்தை போல, விஜய பிரபாகரன் விருப்ப மனுவில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற விவரத்தை குறிப்பிடவில்லை. மனுவை தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் பெற்றுக்கொண்டனர்.
விருப்ப மனு அளித்தப் பிறகு, விஜய பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "எனது அப்பா, அம்மா, நிர்வாகிகள், தொண்டர்கள் என்னை தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் போட்டியிடுவேன். நான் எந்த தொகுதியில் நின்றாலும் தேமுதிக தொண்டர்கள் என்னை வெற்றிபெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.
அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி குறித்த கேள்விக்கு, விஜய பிரபாகரன் பதிலளிக்கவில்லை. தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப் 25ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று கட்சியின் தலைமை அறிவித்தது. மேலும், விருப்ப மனு தாக்கல் செய்ய நாளை (மார்ச் 05) கடைசி நாள் என்பதால் கடந்த இரண்டு நாள்களில் விருப்ப மனு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கட்சியின் பெயருக்கு இழுக்கு வரும் நடவடிக்கையில் தலைமை ஈடுபடாது - பிரேமலதா விஜயகாந்த்