சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உடனான அதிமுக ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று(பிப்.6) நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் கடமை உணர்வோடு கழகப் பணிகளை ஆற்ற வேண்டும். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஜெயலலிதா அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளை பரப்புரைகளாக, துண்டு அறிக்கைகள், விளம்பரங்கள் மூலம் பட்டிதொட்டியெங்குமுள்ள மக்களிடம் விரிவாக கொண்டு சேர்க்க வேண்டும்.
"எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்ற ஜெயலலிதாவின் கனவை நனைவாக்கும் வகையில் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி, கழகத்திற்கு வெற்றியை ஈட்டுவது குறித்தும், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தக்க ஆலோசனைகளை வழங்கினார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமமுகவினர் மீது டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக அமைச்சர்கள்!