சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்ளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் பதவியேற்பு நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து மேயர், துணை மேயருக்கான மறைமுகத் தேர்தல் நாளை (மார்ச் 4) நடைபெற உள்ளது.
மேயர் தேர்வு செய்யப்படும் முறை
இதற்கான வேட்புமனுத் தாக்கலுக்கான மனு இன்று (மார்ச் 3) காலை முதல் சென்னை ரிப்பன் மாளிகையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு மாமன்றம் கூடியவுடன், மேயர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், வேட்பாளர்களின் பெயர்கள் உடனடியாக வாக்குச்சீட்டில் எழுதப்பட்டு, கவுன்சிலர்களிடம் வழங்கப்படும்.
பின்னர் சிவப்பு மையினால் விருப்பமான வேட்பாளர் பெயரைக் கோடிட்டு, மாமன்ற அரங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டியில் உறுப்பினர்கள் வரிசைப்படி சென்று வாக்களிக்க வேண்டும். வாக்குப்பெட்டியில் உள்ள சீட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் தேர்தல் அலுவலரால் உடனடியாக அறிவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து அப்போதே உறுப்பினர்கள் முன்னிலையில் மேயருக்கான பதவிப்பிரமாணம் நடத்தப்படும்.
தேர்தல் அலுவலரால் மேயருக்கு செங்கோல், சங்கிலி, அங்கி ஆகியவை வழங்கப்பட்டு, மேயர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைக்கப்படுவார்.
ஒரே ஒரு வேட்புமனு மட்டுமே பெறப்படும் பட்சத்தில், அந்த வேட்பாளரே போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இதே நடைமுறையில்தான் துணை மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல், பதவியேற்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்