தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், மே.7 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார். அன்றைய தினம் கரோனா நிவாரண திட்டம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என, அதிரடியாகப் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பலரும் முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடியே, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன் முதல் தவணையாக ரூபாய் 2,000 நிவாரணத் தொகை வழங்குவதற்கான அரசாணையில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், அரிசி பெறும் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையான ரூபாய் 2 ஆயிரம் இன்று (மே.15) முதல் அளிக்கப்படவுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நிவாரணத்தை வழங்க வேண்டும் என கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும். அதற்கேற்ப டோக்கன்களில் எந்த நாள் என்பது அச்சடிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 200 பேருக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் 1 மீ இடைவெளியில் நிற்க வேண்டும். கரோனா விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரணத் தொகை வழங்கும் பணி மே 15ஆம் தேதி தொடக்கி 22ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா நிவாரணத் தொகை விநியோகத்துக்காக ஞாயிற்றுக்கிழமையான நாளையும் (மே.16) நியாய விலைக் கடைகள் செயல்படும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: எந்த கார்டு வைத்திருந்தால் நிவாரணம் கிடைக்கும்- தமிழ்நாடு அரசு விளக்கம்!