சென்னை: அம்பத்தூரை சேர்ந்தவர் செல்வ பாலாஜி (22) இவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களான வெங்கட்ராமன், சரண்ராஜ்,பரத் உள்ளிட்ட 5 பேருடன் மது அருந்தினார். பின்னர் அவர்கள் அனைவரும் வீட்டுக்குச் செல்லாமல் புதூர், தாங்கல் பூங்கா அருகே சாலை ஓரத்தில் படுத்து தூங்கி உள்ளனர். நள்ளிரவு 1 மணி அளவில் செல்வபாலாஜி தூக்கத்தில் எழுந்து நண்பர்களை எழுப்பி வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த அம்பத்தூரைச் சார்ந்த புவன் (22), அஜய்(20) மற்றும் 2 சிறுவர்கள் ஆகியோர் செல்வ பாலாஜியை வழிமடக்கி மதுபானம் கேட்டு தகராறு செய்தனர். அப்போது அவர் மதுபானம் இல்லை என கூறியுள்ளார்.இதனால் அவர்களில் ஒருவர் செல்வ பாலாஜியைக் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் தலையில் காயம் அடைந்த செல்வ பாலாஜி சத்தம் போட்டு தூங்கி கொண்டிருந்த நண்பர்களை அழைத்துள்ளார். அவர்களும் அங்கிருந்து எழுந்து ஓடி வந்தனர்.
பின்னர், செல்வ பாலாஜி மற்றும் நண்பர்களை ஓட, ஓட புவன் மற்றும் அவர்களது நண்பர்கள் கும்பல் விரட்டி சென்றனர். இறுதியில் இந்தியன் பேங்க் காலனி, ராகவேந்திரா நகர், 5வது தெரு வழியாக புவனை வழிமடக்கி கத்தியால் கால் தொடையில் வெட்டினர். அப்போது அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீடுகளிலிருந்து ஓடி வந்தனர். இதனால் அவர்களை மிரட்ட செல்வ பாலாஜி உள்ளிட்ட நண்பர்கள் சாலை ஓரம் நிறுத்தி வைத்திருந்த 5 கார், 2 ஆட்டோக்கள், 7 இரு சக்கர வாகனங்களைக் கத்தி மற்றும் கட்டையால் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காயம் அடைந்த செல்வ பாலாஜி, புவன் ஆகியோர் தனித்தனியாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து புவன், அஜய், செல்வ பாலாஜி, வெங்கட்ராமன், மற்றும் இரு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞர் தற்கொலை!