சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலுள்ள 200 வார்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுஉபயோகத்திற்கும், மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே நீண்ட நாள்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள், கட்டடக் கழிவுகள் உள்ள பகுதிகள் மண்டல வாரியாக கண்டறியப்பட்டு தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தூய்மைப்பணி திட்டத்தில் நாள் ஒன்றிற்கு சுமார் ஆயிரத்து300 தூய்மைப் பணியாளர்களும், 500 சாலைப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், 37 காம்பேக்டர் வாகனங்கள், 75 டிப்பர் லாரிகள், 60 ஜேசிபி, பாப்காட் இயந்திரங்கள், 180 பேட்டரி வாகனங்கள், 65 மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் இதுவரை 2ஆயிரத்து 990 டன் குப்பைகள், 8ஆயிரத்து 900 டன் கட்டட கழிவுகள் என மொத்தம் 11ஆயிரத்து 890 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தூய்மைப் பணிகள் மேற்கொள்வதன் மூலம் சென்னை மாநகரம் முழுவதும் தூய்மையாக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.