சென்னை: விஷால் பிலிம் பேக்டரி தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.
அந்தத் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, "வீரமே வாகை சூடும்" என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு: ஜூன் 16ம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு!
இந்த நிலையில் இந்த உத்தரவை விஷால் மீறியுள்ளதாகவும், தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டி விசாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.செளந்தர் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, தங்கள் நிறுவன தயாரிப்பில் தற்போது வரை எந்த படங்களையும் தயாரிக்கவில்லை என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, இந்த விவகாரத்தில் எந்த அவமதிப்பும் இல்லை என தெரிவித்து, லைகாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், விஷால் பட நிறுவனத்திற்கு எதிரான லைகா நிறுவனத்தின் பிரதான வழக்கில் ஜூன் 26ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படும் என கூறி வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: காயத்தில் இருந்து மீண்ட நடிகர் விக்ரம்.. விரைவில் 'தங்கலான்' ஷூட்டிங்கில் இணைகிறார்!