சென்னை: மெரினா கடலின் அழகை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று ரசிக்கும் வகையில், சென்னை 2.0 திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தரப் பாதை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டது. அதன்படி 3 அடி அகலம், 263 மீட்டர் தொலைவிற்கு 1.14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் 27 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் 'மாண்டஸ்' புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மரப்பலகையால் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்து சேதம் அடைந்தது. குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பாதை, பலத்த சேதம் அடைந்தது. அது மட்டும் இல்லாமல் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்ததால் கடற்கரையில் இருக்கும் மணல் அந்த நடைபாதை முழுவதிலும் நிரம்பி விட்டது.
இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியதால், மாநகராட்சி ஊழியர்கள் நடைபாதையில் உள்ள மணல்களை அகற்றி வருகின்றனர். மேலும் சேதமடைந்த பகுதியில் மக்கள் செல்லக்கூடாது என்பதற்காக தடுப்புகளை வைத்துள்ளனர். விரைவில் நடைபாதை சரி செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கனமழையால் உள்வாங்கிய 60 அடி விவசாய கிணறு